×

திருக்கழுக்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை எரிப்பதால் மூச்சு திணறல்: பொதுமக்கள் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை எரிப்பதால், மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெய்குப்பி ஊராட்சியில் அடங்கிய உலகாத்தம்மன்கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவ்வூராட்சியில் உள்ள மொத்த குப்பைகளையும் மக்கள் அருகில் உள்ள ஏரிக்கரையில் கொட்டுகின்றனர். இதில், 90 சதவீதம் பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவு, அழுகிப்போன காய்கறி போன்றவைகள் தான். இதனால், ஏரி தண்ணீர் மாசடைந்து, தண்ணீரை யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சாக்கடை போன்று மாறியுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரிகின்ற விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் குடியிருப்பு (அணுபுரம்) இந்த ஊராட்சிக்குட்பட்டு தான் உள்ளது.

கிட்டதட்ட வளர்ந்துவரும் பெரு நகரமாக மாறி வரும் இந்த ஊராட்சியில் வரியே பல கோடி ரூபாய் தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஊராட்சியில் முறையான குப்பை கிடங்கு ஏற்படுத்தி அங்கு குப்பை கொட்டாமல், மக்கள் வசிக்கின்ற பகுதியில் அதுவும் ஏரிக்கரையில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், அந்தப் குப்பையை எரிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பெரிய ஊராட்சியான இந்த நெய்குப்பி ஊராட்சியில் மக்கள் வசிப்பிடமில்லாத ஒரு பகுதியில் தனியாக ஒரு குப்பை கிடங்கு ஏற்படுத்தி மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து முறைபடுத்தாமல், ஏரிக்கரையில் குப்பையை கொட்டுவதால் மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுவதாலும், குப்பையை எரிப்பதால் மூச்சுத் திணறலுக்கும் நாங்கள் ஆளாகிறோம்.

இங்கு கொட்டக்கூடாது என்று முதல்வர் தனிப்பிரிவு முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அனைத்து துறையினருக்கும் புகார் அனுப்பியும் அதிகாரிகள் இந்த பிரச்னையை சரி செய்ய மறுக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post திருக்கழுக்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை எரிப்பதால் மூச்சு திணறல்: பொதுமக்கள் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Thirukkalukunram ,Thirukkalukkunram Union ,
× RELATED புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தொடக்கம்